Sunday 14 August, 2011

திருவண்ணாமலை - சில அரிய தகவல்கள்

ஆலயம் கண்டேன் தமிழிலும் வர வேண்டும் என்று பலர் என்னிடம் கூறி வந்த போது நான் தயங்கினேன். ஆங்கிலத்தில் எழுதிய அதே விஷயங்களை மறுபடி தமிழில் மொழிபெயர்க்கும் போது எழுத்து நடை காரணமாக சுவாரஸ்யம் குறையலாம், அல்லது எழுதிய விஷயங்களையே மறுபடி எழுதும் போது எனக்கு சலிப்பு ஏற்படலாம் என்று நினைத்து ஒரு யோசனை வரும் போது செய்யலாம் என்று இருந்து விட்டேன். எப்போதும் போல் என்னை வழிநடத்தும் என் குருநாதர் மூலம் எனக்கு கட்டளை வந்தது. 



தினமும் காலை மின்சார ரயிலில் வேலைக்கு செல்லும் போது புத்தகம் படிப்பது வழக்கம். சமீபத்தில் அது போல் ரமண ஆஷ்ரமம் வெளியிட்டிருந்த "அண்ணாமலை எனும் கிரி உருவாகிய கிருபைக்கடல்" என்னும் புத்தகத்தை படித்துகொண்டிருந்தேன். அதில் திருவண்ணாமலையை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தன. திருவண்ணாமலையில் பிறந்த என் கணவர் மற்றும் அவர் சகோதரியிடம் இத்தகவல்களை பகிர்ந்து கொண்ட போது இருவரும் என்னிடம் சொன்னது -" இதெல்லாம் ஒரு எடத்துல எழுதி வச்சா ஈசி யா படிக்கலாம், முழு புக்கையும் படிக்க எங்க நேரம்". இதே போல் பலருக்கும் உபயோகப்படலாம் என்று கருதி இதோ சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

அரியும் அயனும் அரனின் அடிமுடி காண விழைந்து முடியாமல் தங்கள் பேதமையை நினைத்து வருந்தி அண்ணாமலையை புகழ்ந்து நின்றனர். எல்லையில்லா தழல் தம்பமாக விளங்கிய அரனும் அவர்கள் பக்தியில் மகிழ்ந்து "இங்குற்றேன்" என்று வெளிப்பட்டார். இருவரும் அவரிடம் யாவரும் வழிபடுவதற்கு ஏற்றவாறு அண்ணல் மலையாக உருக்கொண்டு தாங்கள் கண்டு அனுபவித்த ஜோதி வடிவத்தை வருடத்திற்கு ஒரு முறை அனைவருக்கும் காட்டி அருள வேண்டும் என்றும் வேண்டினர். இதை ஏற்ற இறைவன் தான் கார்த்திகை மாதம் ஒரு நாள் ஜோதி வடிவம் காட்டி நிற்பேன் எனவும் அனைவரும் காமிக ஆகம முறைப்படி வணங்கி வழிபட லிங்க வடிவிலும் உறைவேன் என வரமளித்தார்.

இக்கிரி அருணாசலம், அண்ணாமலை, சோணாச்சலம், அருணகிரி என வழங்கப்படுகிறது. இறைவன் அருணாச்சல சிவனாகவும், சோணாத்ரி நாதனாகவும் , அருணகிரி யோகியாகவும் விளங்குகிறார். 

கயிலாயத்திலும் மேருவிலும் அவர் இருந்தாலும் இவ்விடத்தில் அவர் மலையாகவே இருப்பதால் அருணாசலம் கைலாயத்தையும், மேருவையும் விட உயர்ந்தது.

பல பண்டிகைகள் உருவாக காரணமாக இருந்தது அண்ணாமலை. விளையாட்டாக இறைவனின் விழிகளை மூடிய இறைவி அத்துயரின் விளைவை நீக்குவதற்காக காஞ்சிக்கு சென்று தவமிருந்தாள்.அத்தவத்தில்   மகிழ்ந்த சிவனார் அவளை திருவண்ணாமலைக்கு சென்று தவத்தை பூர்த்தி செய்யுமாறு கூறினார். உமையும் கௌதம முனிவரின் ஆசிரமத்தில் இருந்து தவம் இருக்கையில் மகிஷாசுரனை போரிட்டு வென்றாள். இம்முக்தி தலத்து பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் வரக்கூடாதென்று அவனை மைசூருக்கு  கொண்டு வந்து  போரிட்டு வென்றாள். இதுவே நவராத்திரியின் துவக்கம். 

அமரர்கள் அண்ணாமலையானை ஏற்றி வழிபட்ட நாள் மாசி சிவராத்திரியாகும். அதுவே லிங்கோத்பவ காலம். அண்ணாமலையான் ஜோதி தம்பமாக எழுந்த நாள் ஆருத்ர தரிசனமாக கொண்டாடப்படுகிறது. 

மகிஷாசுரனை கொன்ற பார்வதி இனி சிவனை விட்டு தனித்திருந்தால் மீண்டும் ஏதாவது தவறு நடந்து விடும் என அஞ்சி அவரின் இட பாகத்தை வேண்டினாள். கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் கூடிய நன்னாளில் அவர் உமையொரு பாகனானார். 

உலகிலுள்ள சிவ தலங்களில் 68 மிக சிறப்புற்று விளங்குகின்றன. இவற்றுள் உத்தமோத்தம தலங்கள் நான்கு. அவை
திருவாரூரில் பிறக்க முக்தி
சிதம்பரத்தில் இருக்க முக்தி
காசியில் இறக்க முக்தி
திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி

பஞ்ச பூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை. அம்மலையின் மூன்று யோசனை தூரத்தில் (சுமார் முப்பது மைல்) உள்ள அனைவருக்கும் ஆசரு தீக்ஷையின்றி சாயுஜ்யம் பயக்கும் என்பது சிவன் வாக்கு. 

வினையை நீக்கும் மலை உருவில் விளங்குவதால் இம்மலைக்கு அ + ருணன் அதாவது வினையை நீக்குபவன் இங்கு அசலனாக விளங்குகிறான் என்று பொருள். 

சிவவாக்கு
1. அருணையில் ஒரு நாள் உபவாசம் பிற தலங்களில் நூறு நாள் உபவாசத்திற்கு சமம். 
2. சோநாச்சலத்தை பக்தியுடன் பிரதட்சிணம் செய்பவன் சகல லோக நாயகனாகி மேலான பதவியை அடைகிறான்.
3. கார்த்திகை மாதம் பௌர்ணமியில் ஒரு சிறு தீபம் அண்ணாமலையார் சன்னதியில் ஏற்றினால் கொடிய பாவங்களிலிருந்து விடுபட்டு சிவபதம் அடையலாம். 
4. காசியில் கோடி பேருக்கு அன்னதானம் அளிப்பதும் அண்ணாமலையில் அந்தணன் ஒருவனுக்கு அன்னம் அளிப்பதற்கு சமமாகாது. 
5. சாயங்காலத்தில் தீபம் பார்த்து வலம் வருபவர்களுக்கு ஒவ்வொரு அடிக்கும் ஒரு யாகம் செய்த பலன் உண்டாகும். 

பன்னிரு திருமுறைகளில் பாடி திளைத்தவர்கள் 
1. ஞானசம்பந்தர் - தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாவது பாடலில் அண்ணாமலையாரைக் குறிப்பிடுகிறார். 
2. அப்பர் தாம் பாடிய திருவண்ணாமலை தேவாரப் பதிகங்கள் நான்கிலும், திருத்தாண்டக பண் இரண்டிலும் அண்ணாமலையாரை பாடியுள்ளார். 
3. சுந்தரமூர்த்தி நாயனார் - இவர் பல தலங்களில் பாடிய பதிகங்களில் அண்ணாமலையாரை நினைத்தே தொழுதுள்ளார். 
4.மாணிக்கவாசகர் - திருவாசகம் கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது பாடல்கள், மேலும் திருவம்மானை, மற்றும் திருவெம்பாவை ஆகிய நூல்கள்.
5. சேந்தனார்  எழுதிய திருப்பல்லாண்டு
6. திருமாளிகை தேவர் எழுதிய திருவிசைப்பா
7. திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இரண்டாவது தந்திரம், எட்டாவது அத்தியாயம்.
8. நக்கீரர், கபிலர், நம்பியாண்டார் நம்பி, காரைக்கால் அம்மையார்.

அத்வைத வேதாந்தத்தில் ஒவ்வொரு மறை இறுதியிலும் ஒவ்வொரு மகாவாக்கியம் உள்ளது. 
ரிக் வேதம் - பிரக்ஞானம் பிரமம் - தன் உணர்வான ஞானமே பிரமம்
யசுர் வேதம் - அஹம் பிரம்மாஸ்மி - நான் பிரமனாக இருக்கிறேன்
சாம வேதம் - தத்வமசி - அது நீயாக விளங்குகிறாய்
அதர்வண வேதம் - அயமாந்மா பிரமம்- என் ஆன்மாவே பிரமம்
இந்த நான்கு வாக்கியங்களின் தாத்பர்ய தத்வமாக விளங்குவது அருணாசலம். 

அண்ணாமலையாரை சுற்றியுள்ள கிரிவல பாதை விக்கிரம பாண்டிய மன்னனால் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. 

வாயுலிங்கத்திற்கு அருகிலுள்ள இரண்டு மைல்கற்கள் மற்றும் நேர் அண்ணாமலையிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவிலுள்ள சாலைக் கல் ஒன்றும் மீன் சின்னம் தாங்கியுள்ளது. 

சூரிய லிங்கத்திற்கு அருகிலுள்ள பழநிஆண்டவர் கோவில் முன்னால் நின்று அண்ணாமலை, அருணாசலம் என்று அழைத்தால் எதிரொலிக்கும்.

துர்வாசர் ஆஸ்ரமத்திலிருந்து நேர் அண்ணாமலை வரை மலையில் நந்தி தரிசனம் காணலாம்.

அக்னி லிங்கத்திலிருந்து பார்த்தால் அண்ணாமலையார் சிகரம் மசூதி போல காட்சியளிக்கும்.

கந்தாஸ்ரமத்தில் சுனை வரும் இடத்திற்கு அருகே ஒரு பாறை கணபதி வடிவில் தோற்றமளிக்கிறது.

ஆதிசங்கரர் அண்ணாமலையார் மேல் அருணாச்சல அஷ்டகம், சந்னவதி, சஹஸ்ரநாமம் போன்றவற்றை இயற்றியுள்ளார். அவர் அண்ணாமலைக்கு வந்தால் அருணாச்சலத்தொடு ஒன்றிவிடுவோம் வினைபயன்படி தாம் மேற்கொண்டுள்ள செயல்களை செய்ய இயலாது என்று நினைத்து சம்பந்தர் போல அரையணி நல்லூரிலிருந்தே (அரகண்டநல்லூர் அதுல்யனாதேஸ்வரரின் பெருமைகளை ஆலயம் கண்டேனில் படித்து மகிழுங்கள்) அண்ணாமலையாரை தரிசித்தார். 

ஆடி மாதம் திருவாடிபூரத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் தீ மிதித்தல் நடைபெறும். இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க இயலாது.

இத்தலத்தில் தான் முதல்முதலில் லிங்க வழிபாடு துவங்கியது. எனவே இதுவே மஹா சிவராத்திரியின் பிறப்பிடம். 

இங்கிருக்கும் துர்க்கை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி கடைசி நாள் அன்று மகிஷாசுரமர்தினி அலங்காரம் செய்வார்கள்.

இது எல்லாவற்றிற்கும் முத்தாய்பாய் கார்த்திகை தீப திருநாள் விளங்குகிறது. சுமார் ஆறு அடி உயர தாமிர கொப்பரையில் ஏற்றப்படும் மகாதீபம் மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு மாலை ஆறு மணிக்கு ஏற்றப்படும். பத்து நாட்கள் திருவிழாவிற்கு மகுடமாக விளங்கும் இத்தீபம் ஒரு வாரம் வரை எரியும்.



அண்ணாமலையாருக்கு அரோஹரா!!

குறிப்பு: இக்கட்டுரையை நான் எழுதி முடித்த பிறகு சகோதரர் சூர்யா இன்னும் பல தகவல்களை கருத்து பகுதியில் சேர்த்தார். அவர் எழுதிய அந்த நல்ல விஷயங்களும் அதன் தூண்டுதலாக நான் சேர்த்த சில தகவல்களும் உங்கள் பார்வைக்காக இதோ:

மருத்துவர் சூர்யா:
திருவண்ணாமலையைப் பற்றி எழுதினால் இப்பிறவி போதாது...தோழி பிரியாவின் அரிய முயற்சியில் சிறு அணில் குஞ்சாக ஈடுபடுவதில் ஆனந்தம் கொள்கிறேன். அவனருளாலே அவன் தாள் வணங்கி.....ஆரம்பமே அண்ணாமலை....பேஷ்..பேஷ்...ரொம்ப நன்னாயிருக்கு..

திருவண்ணாமலையைப் பற்றி இதோ சில விஷயங்கள்

தன்னைத்தானே உய்ய அண்ணாமலையாரே கிரிவலம் வந்து காமதகனம் செய்யும் ஒரு தலை சிறந்த சிவாலயம் திருவண்ணாமலையாகும். வருடத்திற்கு இருமுறை - ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாளும், தைமாதம் மாட்டுப்பொங்கலன்றும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கிரிவலம் வருவார்கள். அம்மனுடன் கொண்ட கோபத்தைத் தணித்த திரு ஊடல் உற்சவம் நிகழும் தலமிது.

மாசி மகா சிவராத்திரியில் இரண்டாம் காலம் லிங்கோத்பவராய் காட்சியளித்து அபிஷேகம் ஏற்கும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.


பாரிஜாத மலர் கொணர கிளி உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்த அருணகிரியாரின் பூதயுடல் சில சதிகாரர்களால் (சம்மந்தாண்டான்) எரியூட்டப்படுகின்றது, கிளிவடிவில் வந்து கந்தர் அநுபூதி பாடி, கிளிவடிவத்திலேயே முருகனால் ஆட்கொள்ளப் பட்ட தலம் திருவண்ணாமலை. இங்கு கிளி கோபுரம் மிகவும் பிரசித்தம்.


தல விருட்ஷம் : மகிழ மரம். மகிழ மரத்தடியில் இருந்து பார்த்தால் நவ கோபுர தரிசனம் கிட்டும்.


சமயக்குரவர் நால்வரில் மூவரால் பாடல் பெற்ற தலமிது. சம்பந்தர், அப்பர், மணிவாசகர் இம் மூவராலும் பாடல் பெற்றது. சுந்தரர் பாடியதாகப் பாடல் இல்லை.

மேற்கு கோபுரத்தின் உள்ளே அண்ணாமலையாரின் திருவடி தரிசனம் கண்டு பாபவிமோசனம் அடைவோம்.

பிரியா: 
அருமையான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சூரியா. சுந்தரர் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருந்த போதிலும் நமக்கு கிடைக்கப் பெற்றவை சில நூறு பாடல்கள் மட்டுமே. அவர் திருவண்ணாமலைக்கு வந்ததற்கான குறிப்புகள் கிடைக்கவில்லையே தவிர பல தலங்களில் பாடிய பாடல்களில் அண்ணாமலையாரை குறித்து பாடியுள்ளார். திருபரங்குன்றத்தில் உள்ள இறைவனை பாடும் போது " அண்ணாமலையேன் என்றீர்" என்கிறார். அதே போல் துறையூர், ஸ்ரீவாஞ்சியம், திருவாரூர் ஆகி இடங்களில் பாடும் போது " மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல் அண்ணலும் நன்னறியா ஆதி " என்றும் " பண்டை மால் பரமன் பிறந்தும், இடந்தும், அயர்ந்தும், கண்டிலராய் அவர்கள் கழல் காண்பதரிதாய பிரான்" என்றும் அண்ணாமலையாரை நினைத்தே பாடியுள்ளார்.
மருத்துவர் சூர்யா :
பிரியா....பின்னிட்டேள்....போங்கோ...திருவண்ணாமலையிலேயே ஒரு கல்யாண சுந்தரர் இருக்கும்போது....இந்த ஆலால சுந்தரருக்கு அங்கு வேலையில்லையோ..என்னவோ?..வன்தொண்டன் சுந்தரரைப் பொறுத்தவரை 84 தலங்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடியுள்ளார். திருவண்ணாமலைக்கு வந்து பாடல் பாடினாரா என்பது தெரியாது. பாடியும் இருக்கலாம். சுயநலம் பிடித்த அண்ணாமலையார் அந்த பாடல்களின் தீந்தேன் சுவையை தான் மட்டும் சுவைக்க நமக்கு அளிக்காமலும் இருக்கலாம்.அல்லது அப்பாடல்களை சுவைக்கும் தகுதி இம்மானுட ஜென்மங்களுக்கு இல்லாமலும் இருக்கலாம். சுந்தரர் தான் நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 54 ஆகும். இவற்றை வைப்புத்தலங்கள் என்பார்கள். திருவண்ணாமலையானது மூவரால் பாடல் பெற்ற தலமாயினும், சுந்தரரைப் பொறுத்தவரை அது ஒரு வைப்புத் தலமாகவே உள்ளது.

நீர் எடுத்தாண்ட குறிப்புகள் மிகவும் அருமை...தேவாரக் கடலில் நீ முத்தெடுக்கும் வித்தைக்கு என் வந்தனங்கள். அதிலும்
"மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்
அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடும்
திண்ணிய மாமதில்சூழ் தென்திரு வாரூர்புக்
கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே"

எப்படித்தான் கண்டு பிடித்தீர்களோ!


அதுமட்டுமா....

தென்னாத்தெனாத் தெத்தெனா என்றுபாடிச்
சில்பூதமும் நீருந் திசைதிசையன
பன்னான்மறை பாடுதிர் பாசூருளீர்
படம்பக்கங்கொட் டுந்திரு வொற்றியூரீர்
பண்ணார்மொழி யாளையொர் பங்குடையீர்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியீர்
அண்ணாமலை யேன்என்றீர் ஆரூருளீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.....

இது திருவொற்றியூர், திருப்பாசூர், திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் போன்ற தலங்களை திருப்பரங்குன்றத்திலிருந்தபடியே ரவுண்டு கட்டும் பாடல். உம்மால் இதை முதன் முதலாக பருகி....உருக எனக்கொரு வாய்ப்பமைந்தது. நன்றிகள்...

அப்புறம் அந்த "கழல் காண்பதரிதாய பிரான்" பாடல் எனக்கும் காண்பதரியாய பாடலாகவே இருக்கின்றது.....

சரி நம்ம மேட்டருக்கு வருவோம்...

திருவண்ணாமலை ...மேலும் சில விசயங்கள்...
அண்ணாமலையான், கண்ணாரமுதன், அதிருங்கழான், தியாகன், தேவராயன், கலியுகத்து மெய்யன், பரிமள வசந்தராஜன், அபிநய புஜங்கராஜன், வசந்தராயன், புழுகணி இறைவன், புழுகணிப் பிரதாபன், மலைமேல் மருந்தன், மன்மதநாதன், வசந்த விநோதன், வசந்தவிழாவழகன், திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகாதேவன், அண்ணாமலை ஆழ்வார், அண்ணாமலை உடையார், அண்ணாமலை நாட்டுடையார் என்பது திருவண்ணாமலையில் உறையும் பேராயிரம் கொண்ட எம்பெருமானின் சில திருநாமங்கள். உண்ணாமலை நாச்சியார், திருக்காமக்கோட்டம் உடைய தம்பிராட்டியார், உலகுடைய பெருமாள் நம்பிராட்டியார் என்பது அழகியின் ஆயிரம் நாமங்களில் சில...

29 comments:

  1. Very Nice. Keep it up... There are lot of hidden secrets in Annamalai... Brammanum Vishnuvume adi mudi kaaana annamalai...! nammaal adhil oru thiliyai kooda unara mudiyaathu... pls see wwww.shivsaitours.blogspot.com to know some more abt annamalai temple(I have also taken a particle only...!)

    ReplyDelete
  2. Kandippaga....idhu oru siru thuli mattume...thangal karuthukkalukku nanri

    ReplyDelete
  3. A very Good successful effort! I appreciate it!
    Keep it up!
    I wish You could have written this before I visited Thiruvannamalai!Anyhow, this publication gives me one more pep to visit !
    Congrats again
    Dr V Thanumoorthy

    ReplyDelete
  4. பிரியா...மிகவும் அருமையாக இருக்கின்றது.....என் வீட்டைப்பற்றி எழுதியுள்ளீர்கள். மிகவும் நன்றி....நீங்கள் அனுமதித்தால் என் சிற்றறிவிற்கு எட்டிய சிலவற்றை நான் பகிர்ந்து கொள்ளலாமா?

    ReplyDelete
  5. @Thanumoorthy Sir, This is just a drop in the mighty ocean of information on Thiruvannamalai. Do let us know when you plan to visit next. We would love to escort you around. thanks so much for your feedback. Regards, Priya

    ReplyDelete
  6. Surya, Kandippaga pagirndhu kollalam. Ungal karuththukkalum thagavalgalum varaverkappaduginrana. Regards, Priya

    ReplyDelete
  7. நன்றி பிரியா...திருவண்ணாமலையைப் பற்றி எழுதினால் இப்பிறவி போதாது...தோழி பிரியாவின் அரிய முயற்சியில் சிறு அணில் குஞ்சாக ஈடுபடுவதில் ஆனந்தம் கொள்கிறேன். அவனருளாலே அவன் தாள் வணங்கி.....ஆரம்பமே அண்ணாமலை....பேஷ்..பேஷ்...ரொம்ப நன்னாயிருக்கு..

    திருவண்ணாமலையைப் பற்றி இதோ சில விஷயங்கள்

    தன்னைத்தானே உய்ய அண்ணாமலையாரே கிரிவலம் வந்து காமதகனம் செய்யும் ஒரு தலை சிறந்த சிவாலயம் திருவண்ணாமலையாகும். வருடத்திற்கு இருமுறை - ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாளும், தைமாதம் மாட்டுப்பொங்கலன்றும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கிரிவலம் வருவார்கள். அம்மனுடன் கொண்ட கோபத்தைத் தணித்த திரு ஊடல் உற்சவம் நிகழும் தலமிது.

    மாசி மகா சிவராத்திரியில் இரண்டாம் காலம் லிங்கோத்பவராய் காட்சியளித்து அபிஷேகம் ஏற்கும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.


    பாரிஜாத மலர் கொணர கிளி உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்த அருணகிரியாரின் பூதயுடல் சில சதிகாரர்களால் (சம்மந்தாண்டான்) எரியூட்டப்படுகின்றது, கிளிவடிவில் வந்து கந்தர் அநுபூதி பாடி, கிளிவடிவத்திலேயே முருகனால் ஆட்கொள்ளப் பட்ட தலம் திருவண்ணாமலை. இங்கு கிளி கோபுரம் மிகவும் பிரசித்தம்.


    தல விருட்ஷம் : மகிழ மரம். மகிழ மரத்தடியில் இருந்து பார்த்தால் நவ கோபுர தரிசனம் கிட்டும்.


    சமயக்குரவர் நால்வரில் மூவரால் பாடல் பெற்ற தலமிது. சம்பந்தர், அப்பர், மணிவாசகர் இம் மூவராலும் பாடல் பெற்றது. சுந்தரர் பாடியதாகப் பாடல் இல்லை.

    மேற்கு கோபுரத்தின் உள்ளே அண்ணாமலையாரின் திருவடி தரிசனம் கண்டு பாபவிமோசனம் அடைவோம்.

    ReplyDelete
  8. அருமையான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சூரியா.
    சுந்தரர் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருந்த போதிலும் நமக்கு கிடைக்கப் பெர்த்ரவை சில நூறு பாடல்கள் மட்டுமே. அவர் திருவண்ணாமலைக்கு வந்ததற்கான குறிப்புகள் கிடைக்கவில்லையே தவிர பல தளங்களில் பாடிய பாடல்களில் அண்ணாமலையாரை குறித்து பாடியுள்ளார். திருபரங்குன்றத்தில் உள்ள இறைவனை பாடும் போது " அண்ணாமலையேன் என்றீர்" என்கிறார். அதே போல் துறையூர், ஸ்ரீவாஞ்சியம், திருவாரூர் ஆகி இடங்களில் பாடும் போது " மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல் அண்ணலும் நன்னறியா ஆதி " என்றும் " பண்டை மால் பரமன் பிறந்தும், இடந்தும், அயர்ந்தும், கண்டிலராய் அவர்கள் கழல் காண்பதரிதாய பிரான்" என்றும் அண்ணாமலையாரை நினைத்தே பாடியுள்ளார்.

    ReplyDelete
  9. பிரியா....பின்னிட்டேள்....போங்கோ...திருவண்ணாமலையிலேயே ஒரு கல்யாண சுந்தரர் இருக்கும்போது....இந்த ஆலால சுந்தரருக்கு அங்கு வேலையில்லையோ..என்னவோ?..வன்தொண்டன் சுந்தரரைப் பொறுத்தவரை 84 தலங்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடியுள்ளார். திருவண்ணாமலைக்கு வந்து பாடல் பாடினாரா என்பது தெரியாது. பாடியும் இருக்கலாம். சுயநலம் பிடித்த அண்ணாமலையார் அந்த பாடல்களின் தீந்தேன் சுவையை தான் மட்டும் சுவைக்க நமக்கு அளிக்காமலும் இருக்கலாம்.அல்லது அப்பாடல்களை சுவைக்கும் தகுதி இம்மானுட ஜென்மங்களுக்கு இல்லாமலும் இருக்கலாம். சுந்தரர் தான் நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 54 ஆகும். இவற்றை வைப்புத்தலங்கள் என்பார்கள். திருவண்ணாமலையானது மூவரால் பாடல் பெற்ற தலமாயினும், சுந்தரரைப் பொறுத்தவரை அது ஒரு வைப்புத் தலமாகவே உள்ளது.

    நீர் எடுத்தாண்ட குறிப்புகள் மிகவும் அருமை...தேவாரக் கடலில் நீ முத்தெடுக்கும் வித்தைக்கு என் வந்தனங்கள். அதிலும்
    "மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்
    அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடும்
    திண்ணிய மாமதில்சூழ் தென்திரு வாரூர்புக்
    கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே"

    எப்படித்தான் கண்டு பிடித்தீர்களோ!


    அதுமட்டுமா....

    தென்னாத்தெனாத் தெத்தெனா என்றுபாடிச்
    சில்பூதமும் நீருந் திசைதிசையன
    பன்னான்மறை பாடுதிர் பாசூருளீர்
    படம்பக்கங்கொட் டுந்திரு வொற்றியூரீர்
    பண்ணார்மொழி யாளையொர் பங்குடையீர்
    படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியீர்
    அண்ணாமலை யேன்என்றீர் ஆரூருளீர்
    அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.....

    இது திருவொற்றியூர், திருப்பாசூர், திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் போன்ற தலங்களை திருப்பரங்குன்றத்திலிருந்தபடியே ரவுண்டு கட்டும் பாடல். உம்மால் இதை முதன் முதலாக பருகி....உருக எனக்கொரு வாய்ப்பமைந்தது. நன்றிகள்...

    அப்புறம் அந்த "கழல் காண்பதரிதாய பிரான்" பாடல் எனக்கும் காண்பதரியாய பாடலாகவே இருக்கின்றது.....

    சரி நம்ம மேட்டருக்கு வருவோம்...

    திருவண்ணாமலை ...மேலும் சில விசயங்கள்...
    அண்ணாமலையான், கண்ணாரமுதன், அதிருங்கழான், தியாகன், தேவராயன், கலியுகத்து மெய்யன், பரிமள வசந்தராஜன், அபிநய புஜங்கராஜன், வசந்தராயன், புழுகணி இறைவன், புழுகணிப் பிரதாபன், மலைமேல் மருந்தன், மன்மதநாதன், வசந்த விநோதன், வசந்தவிழாவழகன், திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகாதேவன், அண்ணாமலை ஆழ்வார், அண்ணாமலை உடையார், அண்ணாமலை நாட்டுடையார் என்பது திருவண்ணாமலையில் உறையும் பேராயிரம் கொண்ட எம்பெருமானின் சில திருநாமங்கள். உண்ணாமலை நாச்சியார், திருக்காமக்கோட்டம் உடைய தம்பிராட்டியார், உலகுடைய பெருமாள் நம்பிராட்டியார் என்பது அழகியின் ஆயிரம் நாமங்களில் சில...

    சரிப்பா...டயர்ட் ஆயிட்டேன்..அபிராமி அந்தாதி வேலை இருக்கின்றது....மீண்டும் சந்திப்போம்....
    அண்ணாமலைக்கு அரோகரா....

    ReplyDelete
  10. சூர்யா படிக்க படிக்க அமுதசுரபி போல தமிழில் அவ்வளவு விஷயங்கள் இருக்கே... கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு! உங்கள் ஆர்வத்தினால் திருவண்ணாமலை தகவல்கள் பாகம் இரண்டு எழுதும் ஆசை வந்திருக்கிறது....காத்திருங்கள் !

    ReplyDelete
  11. இது மட்டும் அல்லாது திருநெல்வாயிலில் சம்பந்தர் பாடிய பாடலிலும் அண்ணாமலையாரை தொழுதது இதோ:
    மாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான், மலர் மேலவன், நேடியும் காண்பு அரியாய்!
    நீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே!
    வாண் ஆர் நுதலார் வலைப்பட்டு, அடியேன், பலவின் கனி ஈஅது போல்வதன் முன்,
    ஆணொடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய்! அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே! .

    ReplyDelete
  12. இது சுந்தரர் திருவெண்காட்டில் அண்ணாமலையாரை பாடியது :) இன்னும் வரும்!


    மாடம் காட்டும் கச்சி உள்ளீர், நிச்சயத்தால் நினைப்பு உளார் பால்;
    பாடும் காட்டில் ஆடல் உள்ளீர்; பரவும் வண்ணம் எங்ஙனே தான்?
    நாடும் காட்டில், அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய
    வேடம் காட்டி, திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

    ReplyDelete
  13. இது திருஎதிர்கொள்பாடி :

    குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன்;
    மருது கீறி ஊடு போன மால், அயனும், அறியா,
    சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா, சோதி; எம் ஆதியான்;
    கருது கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .

    ReplyDelete
  14. பிரியாக்கா....
    கொஞ்சம் நாங்க எழுதறதுக்கு ஏதாவது விட்டு வைங்க....பிட்டு அடிச்சாக்கூட..உங்களை மாதிரி எழுத முடியாது போலிருக்கிறது.
    சரி...இன்னக்கு வெந்ததை தின்னுட்டு வந்ததை கிறுக்குறேன்....
    முதல்ல கதை..அப்புறம் பாட்டு..ஓ கே வா...
    கதை ஸ்டார்ட்ஸ் நௌ...
    அண்ணாமலை - பெயர்க்காரணம்
    அண்ணுதல் என்றால் அணுகுதல், நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் அணுக இயலா,நெருங்க இயலா என்று பொருள்.
    பிரம்மன், திருமால் ஆகியோரின் அகந்தை காரணமாக, அடி முடி தேடி அலைந்து அவர்களால் அணுக முடியாத நெருப்பு மலை அண்ணாமலை. அகந்தையற்ற யாவர்க்கும், மறுமை, ஊழ்வினைகள் அண்ணாமலிருக்கச்செய்யும் மலை....திருவண்ணாமலை
    மலையே இறை...இறையே மலை....
    யுகம் யுகமாய் வாழும் மலை....கிருத யுகத்தில் இது நெருப்பு மலை....திரேதா யுகத்தில் இது மாணிக்க மலை....துவாபர யுகத்தில் இது பொன் மலையாம்...தற்போது கலியுகத்தில் இது கல் மலையாம். என்னடா...மலையே இறையென்றுவிட்டு அது..இது என்கிறானே என்று கோபம் கொள்ளாதீர்கள்...உயிர் உற்றதும், அற்றதும் அவனே....

    அர்த்த நாரியாய் இங்கு நின்றதன் அர்த்தம் என்ன தெரியுமா?

    பிருங்கி முனிவருக்கு சிவனும் சக்தியும் ஒன்னு...அதை நீ ஃபாலோ பன்னு என்று உணர்த்தவே...அவர் ஒன்லி ஆம்பிளை சாமியை மட்டும் கும்பிடுவார்...சக்திக்கு கொஞ்சம் பொஸஸிவ்னெஸ் ஜாஸ்தி....அதனால் ஈசனிடம் இடப்பாகத்தில் இடம் வாங்கி...பிருங்கியிடம்..இப்ப என்னா பண்ணுவே...இப்ப என்னா பண்ணுவே...என்று மாதொரு பாகனாய்...பாகம் பிரியாளாய் நின்ற மந்திர மாமலை.திருவண்ணாமலை...

    சரி..நாளைக்கி பாதாள லிங்கேஸ்வரர் மற்றும் கம்பத்திளையனார்....மற்றும் பல கதைகள் பார்ப்போம்....

    ReplyDelete
  15. இப்ப பாட்டு...

    பிரியாக்கா..நீங்க ஏதேதோ பாட்டு காட்டுறீங்க...நேக்கு பேச்சே வரலை போங்கோ...
    ஒரு டீல்...நீங்க சுந்தரரையும் சம்பந்தரையும் பிடிச்சுகோங்க...நான் நம்ம மாணிக்ஸ் சாமியை புடிச்சுகிறேன்...ஏன்னாக்கா...அவரு சிவனையே "சிக்" கினு புடிச்சிகின்னவரு.. அவரோட 54 பதிகங்களில் அண்ணாமலையாரை மட்டும் சிக்கிடுச்சிடா சிறுத்தைன்னு அலேக்கா தூக்கிடுவோம்...இந்த டீலிங் ஓ கே வா....

    இதோ...வாதவூராரின் திருப் பாதம் தாங்கி.....கொல்லன் பட்டறைக் கொசு போல...(என்னால்) முடியாததைமுயலும் முயற்சி இது....

    மாணிக்கவாசகரும்...திருவண்ணாமலையும்....

    1. திருப்பெருந்துறையில்...அருபரத்தரசன் குருவென வந்து ஆட்கொண்டபின்...மாணிக்க வாசகசுவாமிகளின் முதல் பதிகமான சிவபுராணத்தில்...அண்ணாமலையார்....

    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி (வரி -16)

    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே (வரி -62)

    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே(வரி -72)

    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் (வரி -80)


    2. தில்லையில் மாணிக்க வாசக சுவாமிகளின் அருளிய கீர்த்தி திருவகவலில்...அண்ணாமலையார்....

    அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் (35)
    தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் ( 41)

    பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் (78)

    அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் (101)

    மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன் (107)

    மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்
    தூய மேனிச் சுடர்விடு சோதி
    காதலன் ஆகிக் கழுநீர் மாலை
    ஏறு உடைத்தாக எழில்பெற அணித்தும்
    அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் (110 - 115)

    3. தில்லையில் மாணிக்க வாசக சுவாமிகளின் அருளிய திருவண்டப் பகுதியில்...அண்ணாமலையார்....

    பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க (38)

    அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க (51)

    பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க (57)

    திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்
    முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் (126-127)

    பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே (182)

    4. தில்லையிலிருந்து கொண்டே மாணிக்க வாசக சுவாமிகள் அருளிய போற்றித் திருவகவலில் ஆரம்ப வரிகளே நம் அண்ணாமலையாரிடமிருந்துதான் தொடங்குகின்றது...இதோ

    "நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
    ஈர் அடியாலே மூவுலகு அளந்து
    நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்
    போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று
    அடிமுடி அறியும் ஆதரவு அதனில்
    கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து
    ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து
    ஊழி முதல்வ சயசய என்று
    வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்
    வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில்".. (வரிகள் 1-10)

    காவாய் கனகக் குன்றே போற்றி (வரி 98 )

    மன்னிய திருவருள் மலையே போற்றி (வரி 127 )

    அண்ணாமலை எம் அண்ணா போற்றி (வரி 149 )

    பாகம் பெண் உரு ஆனாய் போற்றி (வரி 152 )

    அருவமும் உருவமும் ஆனாய் போற்றி (வரி 193 )

    மந்திர மாமலை மேயாய் போற்றி (வரி 205 )

    பரம் பரம் சோதிப் பரனே போற்றி (வரி 222 )

    போற்றித் திருவகவலை
    ஒருமுறை கேட்டுப் பாருங்கள்...உள்ளுருகும்...
    ஒருமுறை படித்து பாருங்கள்..ஊனுருகும்...
    ஒருமுறை பாடிப்பாருங்கள்..உயிருருகும்....

    ஸ்..ஸ்...முடியலைப்பா....இன்னும் 50 பதிகமிருக்குங்க....நாளைக்கு கொஞ்சம் ட்ரை பண்ணலாம்...

    ReplyDelete
  16. சூர்யா, சுந்தரர் எங்க ஊர் காரர்....எங்க கிருபாபுரீஸ்வரர் தான் அவருக்கு பித்த பிறைசூடி ன்னு அடி எடுத்து கொடுத்து பிள்ளையார் சுழி போட்டவர்....அப்பறம் அவரை எப்படி விட முடியும்....

    ReplyDelete
  17. சூர்யா....தங்களுக்கு காண அரியதாக இருந்த திருக்கோளிலியில் சுந்தரர் பாடிய பாடல் இதோ:

    பண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்) அயர்ந்தும்
    கண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான்!
    தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்!
    அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .

    ReplyDelete
  18. பிரியா..நேத்து லீவு விட்டுட்டேன்...

    காட்டினாய் நீ கழுக்குன்றிலே என்பது போல்...எனக்கு காணறியா பாடலை காட்டியதற்கு நன்றி....

    டேய்..சூரியா...உன் தேடல் பத்தாதுடா...உள் மனம் உரக்க சொல்கிறது...

    எல்லாக் கோளும் தெற்கு பார்க்கும் திருக்கோளிலியில்..பாடிய பதிகம்....
    மிகவும் அருமையான பதிகம்....
    பதிகமுழுதும்

    "வண்டம ருங்குழ லாளுமை
    நங்கையோர் பங்குடையாய்....."

    "பாதியோர் பெண்ணைவைத் தாய்பட...."


    "தொண்டை வாயுமை நங்கையைநீ
    புல்கி இடத்தில்வைத் தாய்......"

    "முல்லை முறுவல் உமையொரு
    பங்குடை முக்கணனே....."

    "குரவம ருங்குழ லாளுமை
    நங்கையோர் பங்குடையாய்...."

    "எப்பொழுதும்
    வம்பம ருங்குழ லாளரு
    பாகம மர்ந்தவனே..."

    முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடிசாய்ந்து முன்னாள்
    செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான்
    கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய்
    உழுவையின் தோல் உடுத்து உன் மத்தம் மேல் கொண்டு உழிதருமே.

    என்று அர்த்தநாரிக்கு இத்தனை நாமங்கள் சூட்டினான் சுந்தரன்...அதை வலையில் சுட்டான் சூரியன்...


    சரி இன்னைக்கு கதைக்கு வருவோம்...

    திருவண்ணாமலை எப்படி வந்திச்சு?

    உங்களுக்கு தெரியும்...சதுர் முகனுக்கும், சக்ரதாரிக்கும் லடாய்...எதுக்கு லடாய்?

    ஆக்கும் கடமையில்லையெனில்...காக்கும் கடமையே இல்லை..உனக்கு வேலை வைக்கிறவனே நான்...எனவே நாந்தான் பெரியவன்...இது நாமகள் மணாளன்..நான்முகன்.

    காக்கும் கடமையில்லையெனில்...ஆக்கும் கடமை...வேஸ்ட்...ஸோ...நாந்தான் பெரியவன். உன் ஐந்தாவது சிரம் கொய்யப்படும் போது எங்கே போச்சு உனது வீரம்...பிரம்மா..நீ ஒரு டம்மி பீஸ்.....இது பூமகள் மணாளன்...நாராயணன்...

    வாதங்கள் தொடங்கின....முடிவிலா வாதத்தினால் முடங்கின அவர்தம் பணிகள்...வதங்கின உயிர்கள்... முடித்துவைக்க எண்ணி...ஜோதிவடிவில் விசுவ ரூபமாய் நின்றான் விசுவேஸ்வரன். என் அடி அல்லது முடி கண்டவ்ரே வென்றவர்....அசரீரி கேட்டது... வந்தது யாரெனும் எண்ணும் மனநிலையில் இருவரும் இல்லை...வெற்றி ஒன்றே அவர்களது குறிக்கோள்...

    வராக உருவம் கொண்டு.... அடிகாண ஆயத்தமானான் மாலவன்....அன்னம் உருகொண்டு முடி காண முயன்றான் பிரம்மன்....போட்டி தொடங்கியது....மாயம் செய்யும் மாலனுக்கே அடிகள் மாயம் காட்டியது...துவண்டான்...பின் தன் அடி அறியா நிலையை அறிவித்தான்...செங்கண்ணன்.

    அன்னமுரு கொண்டு முடி தேடி நெடும் பயணம் கொண்டான் பிரம்மன்....முடி காண முடியல.....போட்டியில ஜெயிக்கணும்....என்ன செய்யலாம்?...ஒரு தாழம்பூவைக் கண்டு வினவினான்....எங்கிருந்து வருகிறாய்..அது சொன்னது...முடியிலிருந்து வருகிறேன்....யுகம் யுகமாய் பயணிக்கின்றேன்....இன்னும் அடி அகப்படவில்லை...

    உடனே பிரம்மா...தாழம்பூவுடன் ஒரு டீல் போட்டார்....நான் சொல்வதற்கு நீ அமாம் சாமி போடணும்...டீல் ஓ கே ஆனது...

    உடனே பிரம்மா...நான் முடி கண்டேன் ...சாட்சி...அம்முடி அலங்கரித்த இந்த தாழம்பூ...என்றார். உடனே...சிவன் சினம் கொண்டு..ஜோதியிலிருந்து வெளிப்பட்டு....பொய் சொன்ன பிரம்மாவிற்கு கோவில்கள் எங்கும் இருக்காதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு ஆகாதென்றும் சாபமிட்டார்....

    உக்ர மூர்த்தியை..இருவரும்...தேவரும் வழிபட்டு வேண்டியதால் உக்கிரம் தணிந்து லிங்க சொரூபமாய்...அண்ணாமலையாய் அமர்ந்தார்.

    ஆருத்ரா தரிசனமன்றுதான் அந்த ஜோதி தோன்றியது...

    சரி இப்ப எதுக்கு அரச்ச மாவு மாதிரி இந்த கதைன்னு கேக்கிறீங்களா?..
    எல்லாம் காரணமாத்தான்....

    ReplyDelete
  19. சாரிப்பா...
    ஜென்மாஷ்டமி வேலையில் கொஞ்சம் பிஸியாயிட்டேன்.....

    சரி...எதற்காக கதை சொன்னேன் தெரியுமா...போனவருடம்..ஒரு கோவிலுக்கு போயிருந்தேன்....மிகவும் பழமை வாய்ந்த..வசீகரமிக்க சிவாலயமது.
    வழக்கம் போல அங்குள்ள குருக்களிடம் தல வரலாறு...சிறப்புகள், ஸ்பெஷல் அபௌட் த டெம்பிள்..என்று மொக்கை போட்டேன்...கதை கேட்டேன்...சிலிர்த்து சிலையாகி நின்றேன்..பகிர்வதில் பரமானந்தம் கொள்கிறேன்....
    டைட்டில் : அண்ணாமலை பார்ட் -2

    பார்ட் -1 நடந்த இடம் ..திருவண்ணாமலை...கிளைமாக்ஸ் ...பிரம்மாவின் பொய்யுரையும் அதனால் அவர் பெற்ற சாபமும் நமக்குத் தெரியும். அடுத்த பிறவியில் என்ன நடந்தது தெரியுமா...பார்ட் -2

    திருவிரிஞ்சிபுரம் என்று ஒரு ஊர்...அங்கு நம்ம பிரம்மா ஒரு மனிதப் பிறவி எடுக்கிறார். அங்கு உள்ள சிவன் கோவில் குருக்களின் மகனாக சிவ சர்மன் எனும் பெயருடன் பிறக்கிறார் படைக்கும் பிரம்மா...சிறிது காலத்தில் அவரது தந்தை மறைகின்றார். உடனே சிவசர்மனது உறவினர்கள் இவரது பரம்பரை பூசை செய்யும் உரிமையை பறிக்கும் பொருட்டு, பச்சிளம் பாலகனான சிவசர்மனை ஆகம முறைப்படி பூசை செய்ய பணிக்கின்றனர். அவ்வாறு அவன் பூசை செய்யாவிடில் அவனது பரம்பரை பூசை செய்யும் உரிமை, நிலங்கள் யாவும் பறிக்கப்படும் எனவும் அறிவிக்கின்றனர்.

    உடனே சிவசர்மனது தாய் அன்றையதினம் இரவு முழுவதும் அக்கோவிலில் தங்கி இறையிடம் மன்றாடுகின்றாள்....அது ஒரு கார்த்திகை மாதத்தின் கடைசி சனிக்கிழமை..ஈசன் கனவினில் தோன்றி..கவலைப்படாதே! நாளை காலை சிவசர்மனை சிம்மக் குளத்தில் குளித்துப் பின் எனக்கு பூசை செய்ய சொல் எனக் கூறி மறைந்தார்.

    அடுத்த நாள் காலை சிவசர்மன் சிம்மக் குளத்தில் குளித்துவிட்டு வரும் போது, சிவனடியார் வடிவில் பரமேஸ்வரன் வந்து...சிவசர்மனாகிய பிரம்மாவிற்கு உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை போன்றவற்றை அளித்தார். சிவசர்மன் சிவபெருமானுக்கு பூஜை செய்யத் தயாரானான்.

    சுவர்ண கணபதியை ஆராதித்த பின் கையில் திரு மஞ்சன குடத்துடன் பகவானுக்கு அபிசேகம் செய்ய எத்தனிக்கையில் உயரமாக இருந்த மகாலிங்கத்தின் திருமுடி சிறுவனான சிவசர்மனுக்கு எட்டவில்லை.அது கண்டு மனம் வருந்தி...இறையே..ஈசனே....உம் திருமுடி எனக்கு எட்டவில்லையே என்று நெக்குருகி நிற்கையில் அவனது பக்திக்கு இரங்கி ஈசனார் தம் திருமுடியை வளைத்து சிறுவன் முறைப்படி செய்த பூஜைகளை ஏற்றுக்கொண்டார். அதே கோலத்தில் இன்றும் முடி சாய்ந்த மகாலிங்கமாக, ஸ்ரீ மார்க்கபந்தீசுவரராக காட்சி அளிக்கிறார் என்பது கதை...கடைசியில் பிரம்மன் வாயாலே உண்மையை உரைக்க வைத்து...பிரம்மனின் பூசையை ஏற்று...பிரம்மாவிற்கு சாபவிமோசனம் அளித்த தலம்...திருவிரிஞ்சிபுரம்....

    பக்தனுக்காக தலை சாய்த்தான் அண்ணாமலையான்....

    இன்றும் கார்த்திகை கடைசி சனியன்று இக் கோவிலில் தங்கி, சிம்ம தீர்த்தத்தில் குளித்து பிரார்த்தனை செய்தால்..கூடாத திருமணம் கூடும்....குழந்தை வரம் கிட்டும்...எண்ணிய எண்ணம் ஈடேறும்......இங்கு தலவிருட்சம் பனைமரம்..ஒருவருடம் கருப்பாகவும்...மறுவருடம் வெள்ளையாகவும் காய்க்கும் அதிசய மரமிது...

    இப்போ தெரியுதா...ஏன் அண்ணாமலை கதையை ஆரனம்பித்தேன் என்று....

    அண்ணாமலை ஒரு வசூல் ராஜா....எத்தனை பிறவிகள் எடுத்தாலும் (பிறவிக்) கடனை வசூல் செய்யக் கடன்பட்டு நம்வினை வழுவாவண்ணம் அறுப்பவன்....

    கடவுளும் கடனாளி..எப்படி? இதோ...

    என் கடன் பணி செய்து கிடப்பதே!...அப்போ அவன் கடன்?

    அவன் கடன் எம்பிறவிப்பிணி அறுப்பதே!...

    கிரிவலம் தொடரும்....

    ReplyDelete
  20. அருமையான பகிர்விற்கு நன்றி.

    வாழ்த்துகள் ப்ரியா..

    ReplyDelete
  21. VERY GOOD. AND VERY USEFUL YA. THANK U.

    ReplyDelete
  22. அக்னி மலையைப்பற்றிய அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
    http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_15.html

    ReplyDelete
  23. அன்பு சகோதரி தங்களது வலைத்தளம் மிகவும் அருமை. விஜய்யின் "POETRY IN STONE" போன்றுள்ளது.
    Ayyampet J.Balachandran

    ReplyDelete
  24. அன்பு சகோதரி தங்களது வலைத்தளம் மிகவும் அருமை. விஜய்யின் "POETRY IN STONE" போன்றுள்ளது.
    Ayyampet J.Balachandran

    ReplyDelete
  25. திரு அண்ணாமலை பற்றி வெளியில் தெரியாத தகவல் என்னவென்றால், கோவில் அமைந்துள்ள இடத்துக்கு அண்ணமலையார் சொந்தக்காரர் இல்லை. இடம் வேறொருவர் பெயரில் உள்ளது. ஊரும் சதமல்ல..உற்றாரும் சதமல்ல.. என்று ரமணருக்கு காட்டிய அருணாசலன் உறையும் இடம் அவனுடையதல்ல...

    ReplyDelete
  26. அற்புதமான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. மனம் நெகிழ வைக்கும் உரையாடல்கள். அண்ணாமலையார் திருவடி பற்றி தேடிக்கொண்டிருந்த பொழுது இந்த பதிவை காண நேர்ந்தது. வள்ளல் பெருமானார் அண்ணாமலையார் பற்றி பாடல்களும் நெஞ்சை உருக்கும் பாடல்கள் அதனுடைய link

    http://www.thiruarutpa.org/thirumurai/v/T171/tm/thiruvarut_pathikam


    http://www.tamilvu.org/slet/l5F31/l5F31pd1.jsp?bookid=128&sec=8&pno=2500

    ReplyDelete