Sunday 13 November, 2011

திருவண்ணாமலையும் சுந்தரமுர்த்தி நாயனாரும் (3)

திருவெண்காடு திருத்தலம் (Photo Courtesy: Shri Raju)


அடுத்த பாடல் புதன் தலமாகிய திருவெண்காட்டிலே சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்

படங்கொள் நாகஞ் என தொடங்கும் பதிகத்தில் அவர் பாடுகிறார்:

மாடம் காட்டும் கச்சி உள்ளீர், நிச்சயத்தால் நினைப்பு உளார் பால்;
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர்; பரவும் வண்ணம் எங்ங்னே தான்?
நாடும் காட்டில் அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய 
வேடம் காட்டி திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே !

 இப்பாடலில் கடல் சூழ்ந்த திருவெண்காட்டில் எழுந்தருளி இருக்கும் இறைவனே, நீ உன்னை உறுதியான நினைப்புடன் தொழும் பக்தர்களுக்காக பல மாடங்களை உடைய கச்சியம்பதியில் எழுந்தருளி உள்ளாய். மேலும் பேய்கள் பாடும் காட்டிலும் ஆடல் கொண்டுள்ளாய். உன்னை நாடி வந்த பிரமனும் திருமாலும் உன் அடி முடி காண இயலா வண்ணம் அனல் உரு கொண்டு நின்றவனே, உன்னை நாங்கள் வழிபடுவது எவ்வாறு? என்று திருவண்ணாமலையில் இறைவன் காட்டிய கோலத்தை குறிப்பிட்டு பாடுகிறார்.

Friday 11 November, 2011

திருவண்ணாமலையும் சுந்தரமுர்த்தி நாயனாரும் (2)

அடுத்து நாம் பார்க்கப்போவது சம்பந்தருக்கு முத்துச்சிவிகை, மணிக்குடை, பொற்சின்னம்  எல்லாம் இறைவன் வழங்கிய இடம்.

பெண்ணாகடம் அருகே இப்போது திருவட்டுரை என்று வழங்கப்படும் திருநெல்வாயில் அரத்துறை

இங்கே சுந்தரர் பாடிய பாடல் இதோ:

மாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான், மலர் மேலவன்,
நேடியும் காண்பு அறியாய்!
நீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை 
நின்மலனே!
வாண் ஆர் நுதலார் வலைப்பட்டு, அடியேன், பலவின் கனி ஈஅது

போல்வதன் முன்,
ஆணோடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவத!
ஒரு சூழல் சொல் 

இப்பாடலில் வாமன உரு எடுத்து உலகினை ஒரு அடியால் அளந்த மகாவிஷ்ணுவும், மலர் மேல் அமரும் பிரமனும், அடிமுடி தேடியும் காணமுடியாத, நீண்ட முடியினை உடைய தேவர்கள் வந்து வணங்கும் நெல்வாயில் அரத்துறை இறைவனே! ஒளி பொருந்திய நெற்றியை உடைய 
மாந்தரின் மையலாகிய வலையில் வீழ்ந்து பலாப்பழத்தில் அகப்பட்ட ஈயைபோல் நான் அழிவதற்குள் அவர் மையலில் இருந்து  நான் பிழைத்து போக ஒரு வழியை சொல் என்று திருவண்ணாமலையில் அவர் காட்டிய கோலத்தை குறித்து  பாடுகிறார். 


இத்தலத்தில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் பதிகம் பாடியுள்ளனர்.