Friday 13 July, 2012

கரபுரநாதர்



சென்னை - வேலூர் மார்கத்தில் காவேரிபாக்கத்துக்கு அருகே உள்ளது திருப்பாற்கடல். இங்குள்ள கரபுரநாதர் ஆலயத்தை அப்பர் தன் காப்பு திருத்தாண்டகத்தில் வைப்பு தலமாக பாடியுள்ளார்.

ஆலயத்தை பற்றிய குறிப்புக்கள் ஆங்கிலத்தில் இதோ

http://aalayamkanden.blogspot.in/2012/07/treasure-trove-waiting-to-be-explored.html 

அப்பர் பாடிய பாடல் வருமாறு

தெண்ணீர் புனற் கெடில வீராட்டமும்
    சீர்காழி வல்லத் திருவேட்டியும்
உண்ணீரார்  ஏடகமும் ஊறல் அம்பர்
    உறையூர் நறையூர் அரண நல்லூர்
விண்ணார் விடையான் விளமர் வெண்ணி
    மீயச்சூர் வீழிமிழலை மிக்க
கண்ணார் நுதலார் கரபுரமுங் 
    காபாலியாரவர் அவர்தங் காப்புகளே

இத்தலத்திற்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. இங்குள்ள முருகன் அருணகிரிநாதரால் பாடப் பெற்றவராகும். அப்பாடல் இதோ:


இக்கோவிலின் தொன்மையையும் பழமையையும் விளக்க 1926ம் ஆண்டு அச்சடிக்க பட்ட ஒரு லட்சதீப விழா மடலை காட்டினார் அர்ச்சகர். அதிலிருந்த தகவல்கள் இதோ:

கார்சொரியும் பாலாற்றின் களிபெய்தும் பஞ்சதரு பார்பொழியும் செந்நெற் பாலிக்கும் - தார்கேழில் திருகரபுரத்தீசன் தீபமஹோத்சவத்திற்காப் பெருச்சாளி யூர்தியை பேணு

ஒலி கடல் சூழ்ந்த உலகிற்கு ஒரு மாமணி யென விளங்கும் நாவலோங்கிய மா பெருந்தீவினுள் தொன்மை நலன்கவின் குமரி கண்டத்திலே முத்தமிழ் சீவணி மூவா நலந்தரும் ஒண்டமிழ் நாட்டில் தண்டகன் முதலா தண்டாசிறப்பின் பண்டை மன்னர் பற்பலர் ஆண்ட தொண்டை நாட்டின் கண்ணே முத்திதரு நகர் எழிலின் முதன்மையானதும், எல்லா உலகங்கட்கும் இறைவியாகிய உமையம்மையாரே திருகாமகோட்டதில் எழுந்தருளி இருந்து உயிர்களிடத்து அருளைக் கொண்டருளிய காமகண்ணியார் என்னும் பெயரோடு பொருந்தி முப்பத்திரெண்டாம் வனத்தருளியுள்ள கம்பையாற்றின் கண் ஒப்புயர்வற்ற ஒரு மாவின் கீழ் மணல் லிங்கமூர்த்தியை எழுந்தருளப் பண்ணி பூசிக்கும் பொழுது அம்மையின் அன்பை விளக்கும் பொருட்டு எம்பெருமான் ஏவிய வெள்ளத்துக்கு ஆற்றாது அச்சிவளிங்கபெருமானை தழுவிக் கொள்ள அவர் குழைந்தருளி முலைதழும்பும் வளைத்தழும்பும் கொண்டு வீற்றிருக்க பெற்றதும், துண்டிரன், தண்டகன், தொண்டைமான்கள், பல்லவர்கள், சோழர்கள், சாளுக்கியர்கள், விஜயநகரத்து அரசர்கள் முதலிய பல்லோர்களால் ஆளப்பட்டதும் இன்றைக்கு 4300 ஆண்டுகளுக்கு முன் காஞ்சி மண்டலத்தை சோழன் திருமாவளவனாகிய கரிகாற் பெருவளத்தான் நாடாகி நகரம் ஸ்தாபிக்க பட்டதும் பழைய கல்வெட்டுகளிலும், சங்க நூல்களிலும் கடற்கச்சி என்று சிறப்பிக்க பட்டதுமான காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்ட தொண்டை மண்டலத்து இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய படுவூர் கோட்டத்து தனியூரான அவனி நாராயண சதுர்வேதி மங்கலம் என்கிற காவேரிபாக்கதிற்கு தெற்கில் இரண்டு மைல் தூரத்தில் உள்ள திருபாற்கடல் என வழங்கும் கரபுரத்தில் மிகவும் பழமையுற்றதும் மூவர் தேவாரத்தில் வைப்பு தலமாக பாடப்பட்டதும் ,மதுரை கொண்ட கோபரகேசரிவர்மன், பார்த்திவேந்திர பல்லவன், இளங்கோ வேளார்பூதி முதலிய பல அரசர் காலத்து கல்வெட்டுகள் அமைக்க பெற்றதும், ஈழத்தரையின் போரில் வெற்றி கொண்ட காரிமங்கலமுடையார் முதலிய நால்வரால் திருப்பணி முதலிய செய்யப்பட்டதும் அடியார்கள் இடர்கள் நீக்கியாளும் பொருட்டு திருக்கோயில் கொண்டு எழுந்தருளி நின்ற ஸ்ரீ அபிதகுஜாம்பாள் வாமபாகத்தில் அமர்ந்த திருகரமுடைய நாயனார்.

இதிலிருந்து இக்கோவிலின் தொன்மையையும், காலத்தையும், நாம் நன்கு அறியலாம்.

#yOqnezkbLZ# 

Tuesday 7 February, 2012

திருவண்ணாமலையும் சுந்தரமூர்த்தி நாயனாரும் (5)

சிறிய இடைவெளிக்கு பிறகு இதோ இன்னும் ஒரு இனிய பாடல். 

இது சுந்தரரின் அபிமான திருவாரூரில் பாடப்பட்டதாகும். திருவாரூர் திருத்தலம் தம்பிரான் தோழரின் வாழ்வில் நடந்த பல சுவையான சம்பவங்களுக்கு சான்றாக விளங்குவது. இறைவன் இப்படி கூட ஒரு தொண்டருக்கு அருள் செய்ய முடியுமா! ஆஹா, சுந்தரர் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்று ஒவ்வொரு சிவத்தொண்டரும் பொறாமை படும் வகையில் பல சம்பவங்கள் நடந்த இடம். சுந்தரர் பாடிய பாடல்களுள் கிடைத்தவற்றிலே மிகவும் உருகி பாடிய இடம் திருவாரூர் தான்  என்பது என் தாழ்மையான கருத்து.

இந்த பாடல் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன் நண்பர் சேரமான் பெருமாளுடன் பாண்டி நாட்டு திருத்தலங்களை தரிசித்து விட்டு திருவாரூர் திரும்பிய போது பாடிய பாடல். கிட்டத்தட்ட இவ்வுலக வாழ்க்கை போதும், மீண்டும் உன்னடி சேர்வதே இன்பம் என்ற நிலை எய்திய பின் பாடிய அருமையான பாடல் 

உதிரநீர் இறைச்சிக் குப்பை எடுத்தது மலக்குகை மேல்
வருவதோர் மாயக் கூரை வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
கரியமால் அயனும் தேடி கழலினைக் காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. 

இப்பாடலில் திருமாலும் பிரமனும் தேடி காண முடியாத திருவடிகளை உடைய திருவாரூரில் உள்ள என் தந்தையே! என்று திருவாரூர் ஈசனை அண்ணாமலையாரை குறிப்பிட்டே அழைக்கிறார்!

குருதி நீரும் தசைகுவியலும் அதன்மேல் போர்த்திய தோலும் உள்ள கூரைக்குள் வாழும் அற்ப மானிட உடல் வாழ்விற்கு அஞ்சுவதாக அவர் கூறுகிறார்!