Sunday, 14 August 2011

திருவண்ணாமலை - சில அரிய தகவல்கள்

ஆலயம் கண்டேன் தமிழிலும் வர வேண்டும் என்று பலர் என்னிடம் கூறி வந்த போது நான் தயங்கினேன். ஆங்கிலத்தில் எழுதிய அதே விஷயங்களை மறுபடி தமிழில் மொழிபெயர்க்கும் போது எழுத்து நடை காரணமாக சுவாரஸ்யம் குறையலாம், அல்லது எழுதிய விஷயங்களையே மறுபடி எழுதும் போது எனக்கு சலிப்பு ஏற்படலாம் என்று நினைத்து ஒரு யோசனை வரும் போது செய்யலாம் என்று இருந்து விட்டேன். எப்போதும் போல் என்னை வழிநடத்தும் என் குருநாதர் மூலம் எனக்கு கட்டளை வந்தது. 



தினமும் காலை மின்சார ரயிலில் வேலைக்கு செல்லும் போது புத்தகம் படிப்பது வழக்கம். சமீபத்தில் அது போல் ரமண ஆஷ்ரமம் வெளியிட்டிருந்த "அண்ணாமலை எனும் கிரி உருவாகிய கிருபைக்கடல்" என்னும் புத்தகத்தை படித்துகொண்டிருந்தேன். அதில் திருவண்ணாமலையை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தன. திருவண்ணாமலையில் பிறந்த என் கணவர் மற்றும் அவர் சகோதரியிடம் இத்தகவல்களை பகிர்ந்து கொண்ட போது இருவரும் என்னிடம் சொன்னது -" இதெல்லாம் ஒரு எடத்துல எழுதி வச்சா ஈசி யா படிக்கலாம், முழு புக்கையும் படிக்க எங்க நேரம்". இதே போல் பலருக்கும் உபயோகப்படலாம் என்று கருதி இதோ சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

அரியும் அயனும் அரனின் அடிமுடி காண விழைந்து முடியாமல் தங்கள் பேதமையை நினைத்து வருந்தி அண்ணாமலையை புகழ்ந்து நின்றனர். எல்லையில்லா தழல் தம்பமாக விளங்கிய அரனும் அவர்கள் பக்தியில் மகிழ்ந்து "இங்குற்றேன்" என்று வெளிப்பட்டார். இருவரும் அவரிடம் யாவரும் வழிபடுவதற்கு ஏற்றவாறு அண்ணல் மலையாக உருக்கொண்டு தாங்கள் கண்டு அனுபவித்த ஜோதி வடிவத்தை வருடத்திற்கு ஒரு முறை அனைவருக்கும் காட்டி அருள வேண்டும் என்றும் வேண்டினர். இதை ஏற்ற இறைவன் தான் கார்த்திகை மாதம் ஒரு நாள் ஜோதி வடிவம் காட்டி நிற்பேன் எனவும் அனைவரும் காமிக ஆகம முறைப்படி வணங்கி வழிபட லிங்க வடிவிலும் உறைவேன் என வரமளித்தார்.

இக்கிரி அருணாசலம், அண்ணாமலை, சோணாச்சலம், அருணகிரி என வழங்கப்படுகிறது. இறைவன் அருணாச்சல சிவனாகவும், சோணாத்ரி நாதனாகவும் , அருணகிரி யோகியாகவும் விளங்குகிறார். 

கயிலாயத்திலும் மேருவிலும் அவர் இருந்தாலும் இவ்விடத்தில் அவர் மலையாகவே இருப்பதால் அருணாசலம் கைலாயத்தையும், மேருவையும் விட உயர்ந்தது.

பல பண்டிகைகள் உருவாக காரணமாக இருந்தது அண்ணாமலை. விளையாட்டாக இறைவனின் விழிகளை மூடிய இறைவி அத்துயரின் விளைவை நீக்குவதற்காக காஞ்சிக்கு சென்று தவமிருந்தாள்.அத்தவத்தில்   மகிழ்ந்த சிவனார் அவளை திருவண்ணாமலைக்கு சென்று தவத்தை பூர்த்தி செய்யுமாறு கூறினார். உமையும் கௌதம முனிவரின் ஆசிரமத்தில் இருந்து தவம் இருக்கையில் மகிஷாசுரனை போரிட்டு வென்றாள். இம்முக்தி தலத்து பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் வரக்கூடாதென்று அவனை மைசூருக்கு  கொண்டு வந்து  போரிட்டு வென்றாள். இதுவே நவராத்திரியின் துவக்கம். 

அமரர்கள் அண்ணாமலையானை ஏற்றி வழிபட்ட நாள் மாசி சிவராத்திரியாகும். அதுவே லிங்கோத்பவ காலம். அண்ணாமலையான் ஜோதி தம்பமாக எழுந்த நாள் ஆருத்ர தரிசனமாக கொண்டாடப்படுகிறது. 

மகிஷாசுரனை கொன்ற பார்வதி இனி சிவனை விட்டு தனித்திருந்தால் மீண்டும் ஏதாவது தவறு நடந்து விடும் என அஞ்சி அவரின் இட பாகத்தை வேண்டினாள். கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் கூடிய நன்னாளில் அவர் உமையொரு பாகனானார். 

உலகிலுள்ள சிவ தலங்களில் 68 மிக சிறப்புற்று விளங்குகின்றன. இவற்றுள் உத்தமோத்தம தலங்கள் நான்கு. அவை
திருவாரூரில் பிறக்க முக்தி
சிதம்பரத்தில் இருக்க முக்தி
காசியில் இறக்க முக்தி
திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி

பஞ்ச பூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை. அம்மலையின் மூன்று யோசனை தூரத்தில் (சுமார் முப்பது மைல்) உள்ள அனைவருக்கும் ஆசரு தீக்ஷையின்றி சாயுஜ்யம் பயக்கும் என்பது சிவன் வாக்கு. 

வினையை நீக்கும் மலை உருவில் விளங்குவதால் இம்மலைக்கு அ + ருணன் அதாவது வினையை நீக்குபவன் இங்கு அசலனாக விளங்குகிறான் என்று பொருள். 

சிவவாக்கு
1. அருணையில் ஒரு நாள் உபவாசம் பிற தலங்களில் நூறு நாள் உபவாசத்திற்கு சமம். 
2. சோநாச்சலத்தை பக்தியுடன் பிரதட்சிணம் செய்பவன் சகல லோக நாயகனாகி மேலான பதவியை அடைகிறான்.
3. கார்த்திகை மாதம் பௌர்ணமியில் ஒரு சிறு தீபம் அண்ணாமலையார் சன்னதியில் ஏற்றினால் கொடிய பாவங்களிலிருந்து விடுபட்டு சிவபதம் அடையலாம். 
4. காசியில் கோடி பேருக்கு அன்னதானம் அளிப்பதும் அண்ணாமலையில் அந்தணன் ஒருவனுக்கு அன்னம் அளிப்பதற்கு சமமாகாது. 
5. சாயங்காலத்தில் தீபம் பார்த்து வலம் வருபவர்களுக்கு ஒவ்வொரு அடிக்கும் ஒரு யாகம் செய்த பலன் உண்டாகும். 

பன்னிரு திருமுறைகளில் பாடி திளைத்தவர்கள் 
1. ஞானசம்பந்தர் - தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாவது பாடலில் அண்ணாமலையாரைக் குறிப்பிடுகிறார். 
2. அப்பர் தாம் பாடிய திருவண்ணாமலை தேவாரப் பதிகங்கள் நான்கிலும், திருத்தாண்டக பண் இரண்டிலும் அண்ணாமலையாரை பாடியுள்ளார். 
3. சுந்தரமூர்த்தி நாயனார் - இவர் பல தலங்களில் பாடிய பதிகங்களில் அண்ணாமலையாரை நினைத்தே தொழுதுள்ளார். 
4.மாணிக்கவாசகர் - திருவாசகம் கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது பாடல்கள், மேலும் திருவம்மானை, மற்றும் திருவெம்பாவை ஆகிய நூல்கள்.
5. சேந்தனார்  எழுதிய திருப்பல்லாண்டு
6. திருமாளிகை தேவர் எழுதிய திருவிசைப்பா
7. திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இரண்டாவது தந்திரம், எட்டாவது அத்தியாயம்.
8. நக்கீரர், கபிலர், நம்பியாண்டார் நம்பி, காரைக்கால் அம்மையார்.

அத்வைத வேதாந்தத்தில் ஒவ்வொரு மறை இறுதியிலும் ஒவ்வொரு மகாவாக்கியம் உள்ளது. 
ரிக் வேதம் - பிரக்ஞானம் பிரமம் - தன் உணர்வான ஞானமே பிரமம்
யசுர் வேதம் - அஹம் பிரம்மாஸ்மி - நான் பிரமனாக இருக்கிறேன்
சாம வேதம் - தத்வமசி - அது நீயாக விளங்குகிறாய்
அதர்வண வேதம் - அயமாந்மா பிரமம்- என் ஆன்மாவே பிரமம்
இந்த நான்கு வாக்கியங்களின் தாத்பர்ய தத்வமாக விளங்குவது அருணாசலம். 

அண்ணாமலையாரை சுற்றியுள்ள கிரிவல பாதை விக்கிரம பாண்டிய மன்னனால் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. 

வாயுலிங்கத்திற்கு அருகிலுள்ள இரண்டு மைல்கற்கள் மற்றும் நேர் அண்ணாமலையிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவிலுள்ள சாலைக் கல் ஒன்றும் மீன் சின்னம் தாங்கியுள்ளது. 

சூரிய லிங்கத்திற்கு அருகிலுள்ள பழநிஆண்டவர் கோவில் முன்னால் நின்று அண்ணாமலை, அருணாசலம் என்று அழைத்தால் எதிரொலிக்கும்.

துர்வாசர் ஆஸ்ரமத்திலிருந்து நேர் அண்ணாமலை வரை மலையில் நந்தி தரிசனம் காணலாம்.

அக்னி லிங்கத்திலிருந்து பார்த்தால் அண்ணாமலையார் சிகரம் மசூதி போல காட்சியளிக்கும்.

கந்தாஸ்ரமத்தில் சுனை வரும் இடத்திற்கு அருகே ஒரு பாறை கணபதி வடிவில் தோற்றமளிக்கிறது.

ஆதிசங்கரர் அண்ணாமலையார் மேல் அருணாச்சல அஷ்டகம், சந்னவதி, சஹஸ்ரநாமம் போன்றவற்றை இயற்றியுள்ளார். அவர் அண்ணாமலைக்கு வந்தால் அருணாச்சலத்தொடு ஒன்றிவிடுவோம் வினைபயன்படி தாம் மேற்கொண்டுள்ள செயல்களை செய்ய இயலாது என்று நினைத்து சம்பந்தர் போல அரையணி நல்லூரிலிருந்தே (அரகண்டநல்லூர் அதுல்யனாதேஸ்வரரின் பெருமைகளை ஆலயம் கண்டேனில் படித்து மகிழுங்கள்) அண்ணாமலையாரை தரிசித்தார். 

ஆடி மாதம் திருவாடிபூரத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் தீ மிதித்தல் நடைபெறும். இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க இயலாது.

இத்தலத்தில் தான் முதல்முதலில் லிங்க வழிபாடு துவங்கியது. எனவே இதுவே மஹா சிவராத்திரியின் பிறப்பிடம். 

இங்கிருக்கும் துர்க்கை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி கடைசி நாள் அன்று மகிஷாசுரமர்தினி அலங்காரம் செய்வார்கள்.

இது எல்லாவற்றிற்கும் முத்தாய்பாய் கார்த்திகை தீப திருநாள் விளங்குகிறது. சுமார் ஆறு அடி உயர தாமிர கொப்பரையில் ஏற்றப்படும் மகாதீபம் மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு மாலை ஆறு மணிக்கு ஏற்றப்படும். பத்து நாட்கள் திருவிழாவிற்கு மகுடமாக விளங்கும் இத்தீபம் ஒரு வாரம் வரை எரியும்.



அண்ணாமலையாருக்கு அரோஹரா!!

குறிப்பு: இக்கட்டுரையை நான் எழுதி முடித்த பிறகு சகோதரர் சூர்யா இன்னும் பல தகவல்களை கருத்து பகுதியில் சேர்த்தார். அவர் எழுதிய அந்த நல்ல விஷயங்களும் அதன் தூண்டுதலாக நான் சேர்த்த சில தகவல்களும் உங்கள் பார்வைக்காக இதோ:

மருத்துவர் சூர்யா:
திருவண்ணாமலையைப் பற்றி எழுதினால் இப்பிறவி போதாது...தோழி பிரியாவின் அரிய முயற்சியில் சிறு அணில் குஞ்சாக ஈடுபடுவதில் ஆனந்தம் கொள்கிறேன். அவனருளாலே அவன் தாள் வணங்கி.....ஆரம்பமே அண்ணாமலை....பேஷ்..பேஷ்...ரொம்ப நன்னாயிருக்கு..

திருவண்ணாமலையைப் பற்றி இதோ சில விஷயங்கள்

தன்னைத்தானே உய்ய அண்ணாமலையாரே கிரிவலம் வந்து காமதகனம் செய்யும் ஒரு தலை சிறந்த சிவாலயம் திருவண்ணாமலையாகும். வருடத்திற்கு இருமுறை - ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாளும், தைமாதம் மாட்டுப்பொங்கலன்றும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கிரிவலம் வருவார்கள். அம்மனுடன் கொண்ட கோபத்தைத் தணித்த திரு ஊடல் உற்சவம் நிகழும் தலமிது.

மாசி மகா சிவராத்திரியில் இரண்டாம் காலம் லிங்கோத்பவராய் காட்சியளித்து அபிஷேகம் ஏற்கும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.


பாரிஜாத மலர் கொணர கிளி உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்த அருணகிரியாரின் பூதயுடல் சில சதிகாரர்களால் (சம்மந்தாண்டான்) எரியூட்டப்படுகின்றது, கிளிவடிவில் வந்து கந்தர் அநுபூதி பாடி, கிளிவடிவத்திலேயே முருகனால் ஆட்கொள்ளப் பட்ட தலம் திருவண்ணாமலை. இங்கு கிளி கோபுரம் மிகவும் பிரசித்தம்.


தல விருட்ஷம் : மகிழ மரம். மகிழ மரத்தடியில் இருந்து பார்த்தால் நவ கோபுர தரிசனம் கிட்டும்.


சமயக்குரவர் நால்வரில் மூவரால் பாடல் பெற்ற தலமிது. சம்பந்தர், அப்பர், மணிவாசகர் இம் மூவராலும் பாடல் பெற்றது. சுந்தரர் பாடியதாகப் பாடல் இல்லை.

மேற்கு கோபுரத்தின் உள்ளே அண்ணாமலையாரின் திருவடி தரிசனம் கண்டு பாபவிமோசனம் அடைவோம்.

பிரியா: 
அருமையான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சூரியா. சுந்தரர் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருந்த போதிலும் நமக்கு கிடைக்கப் பெற்றவை சில நூறு பாடல்கள் மட்டுமே. அவர் திருவண்ணாமலைக்கு வந்ததற்கான குறிப்புகள் கிடைக்கவில்லையே தவிர பல தலங்களில் பாடிய பாடல்களில் அண்ணாமலையாரை குறித்து பாடியுள்ளார். திருபரங்குன்றத்தில் உள்ள இறைவனை பாடும் போது " அண்ணாமலையேன் என்றீர்" என்கிறார். அதே போல் துறையூர், ஸ்ரீவாஞ்சியம், திருவாரூர் ஆகி இடங்களில் பாடும் போது " மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல் அண்ணலும் நன்னறியா ஆதி " என்றும் " பண்டை மால் பரமன் பிறந்தும், இடந்தும், அயர்ந்தும், கண்டிலராய் அவர்கள் கழல் காண்பதரிதாய பிரான்" என்றும் அண்ணாமலையாரை நினைத்தே பாடியுள்ளார்.
மருத்துவர் சூர்யா :
பிரியா....பின்னிட்டேள்....போங்கோ...திருவண்ணாமலையிலேயே ஒரு கல்யாண சுந்தரர் இருக்கும்போது....இந்த ஆலால சுந்தரருக்கு அங்கு வேலையில்லையோ..என்னவோ?..வன்தொண்டன் சுந்தரரைப் பொறுத்தவரை 84 தலங்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடியுள்ளார். திருவண்ணாமலைக்கு வந்து பாடல் பாடினாரா என்பது தெரியாது. பாடியும் இருக்கலாம். சுயநலம் பிடித்த அண்ணாமலையார் அந்த பாடல்களின் தீந்தேன் சுவையை தான் மட்டும் சுவைக்க நமக்கு அளிக்காமலும் இருக்கலாம்.அல்லது அப்பாடல்களை சுவைக்கும் தகுதி இம்மானுட ஜென்மங்களுக்கு இல்லாமலும் இருக்கலாம். சுந்தரர் தான் நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 54 ஆகும். இவற்றை வைப்புத்தலங்கள் என்பார்கள். திருவண்ணாமலையானது மூவரால் பாடல் பெற்ற தலமாயினும், சுந்தரரைப் பொறுத்தவரை அது ஒரு வைப்புத் தலமாகவே உள்ளது.

நீர் எடுத்தாண்ட குறிப்புகள் மிகவும் அருமை...தேவாரக் கடலில் நீ முத்தெடுக்கும் வித்தைக்கு என் வந்தனங்கள். அதிலும்
"மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்
அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடும்
திண்ணிய மாமதில்சூழ் தென்திரு வாரூர்புக்
கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே"

எப்படித்தான் கண்டு பிடித்தீர்களோ!


அதுமட்டுமா....

தென்னாத்தெனாத் தெத்தெனா என்றுபாடிச்
சில்பூதமும் நீருந் திசைதிசையன
பன்னான்மறை பாடுதிர் பாசூருளீர்
படம்பக்கங்கொட் டுந்திரு வொற்றியூரீர்
பண்ணார்மொழி யாளையொர் பங்குடையீர்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியீர்
அண்ணாமலை யேன்என்றீர் ஆரூருளீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.....

இது திருவொற்றியூர், திருப்பாசூர், திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் போன்ற தலங்களை திருப்பரங்குன்றத்திலிருந்தபடியே ரவுண்டு கட்டும் பாடல். உம்மால் இதை முதன் முதலாக பருகி....உருக எனக்கொரு வாய்ப்பமைந்தது. நன்றிகள்...

அப்புறம் அந்த "கழல் காண்பதரிதாய பிரான்" பாடல் எனக்கும் காண்பதரியாய பாடலாகவே இருக்கின்றது.....

சரி நம்ம மேட்டருக்கு வருவோம்...

திருவண்ணாமலை ...மேலும் சில விசயங்கள்...
அண்ணாமலையான், கண்ணாரமுதன், அதிருங்கழான், தியாகன், தேவராயன், கலியுகத்து மெய்யன், பரிமள வசந்தராஜன், அபிநய புஜங்கராஜன், வசந்தராயன், புழுகணி இறைவன், புழுகணிப் பிரதாபன், மலைமேல் மருந்தன், மன்மதநாதன், வசந்த விநோதன், வசந்தவிழாவழகன், திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகாதேவன், அண்ணாமலை ஆழ்வார், அண்ணாமலை உடையார், அண்ணாமலை நாட்டுடையார் என்பது திருவண்ணாமலையில் உறையும் பேராயிரம் கொண்ட எம்பெருமானின் சில திருநாமங்கள். உண்ணாமலை நாச்சியார், திருக்காமக்கோட்டம் உடைய தம்பிராட்டியார், உலகுடைய பெருமாள் நம்பிராட்டியார் என்பது அழகியின் ஆயிரம் நாமங்களில் சில...