Tuesday 7 February, 2012

திருவண்ணாமலையும் சுந்தரமூர்த்தி நாயனாரும் (5)

சிறிய இடைவெளிக்கு பிறகு இதோ இன்னும் ஒரு இனிய பாடல். 

இது சுந்தரரின் அபிமான திருவாரூரில் பாடப்பட்டதாகும். திருவாரூர் திருத்தலம் தம்பிரான் தோழரின் வாழ்வில் நடந்த பல சுவையான சம்பவங்களுக்கு சான்றாக விளங்குவது. இறைவன் இப்படி கூட ஒரு தொண்டருக்கு அருள் செய்ய முடியுமா! ஆஹா, சுந்தரர் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்று ஒவ்வொரு சிவத்தொண்டரும் பொறாமை படும் வகையில் பல சம்பவங்கள் நடந்த இடம். சுந்தரர் பாடிய பாடல்களுள் கிடைத்தவற்றிலே மிகவும் உருகி பாடிய இடம் திருவாரூர் தான்  என்பது என் தாழ்மையான கருத்து.

இந்த பாடல் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன் நண்பர் சேரமான் பெருமாளுடன் பாண்டி நாட்டு திருத்தலங்களை தரிசித்து விட்டு திருவாரூர் திரும்பிய போது பாடிய பாடல். கிட்டத்தட்ட இவ்வுலக வாழ்க்கை போதும், மீண்டும் உன்னடி சேர்வதே இன்பம் என்ற நிலை எய்திய பின் பாடிய அருமையான பாடல் 

உதிரநீர் இறைச்சிக் குப்பை எடுத்தது மலக்குகை மேல்
வருவதோர் மாயக் கூரை வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
கரியமால் அயனும் தேடி கழலினைக் காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. 

இப்பாடலில் திருமாலும் பிரமனும் தேடி காண முடியாத திருவடிகளை உடைய திருவாரூரில் உள்ள என் தந்தையே! என்று திருவாரூர் ஈசனை அண்ணாமலையாரை குறிப்பிட்டே அழைக்கிறார்!

குருதி நீரும் தசைகுவியலும் அதன்மேல் போர்த்திய தோலும் உள்ள கூரைக்குள் வாழும் அற்ப மானிட உடல் வாழ்விற்கு அஞ்சுவதாக அவர் கூறுகிறார்!